முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
Change page

பிளாஸ்மா சங்கிலிகள்

பிளாஸ்மா சங்கிலி என்பது எத்தேரியம் முதன்மை வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்ட ஒரு தனி தொகுதிச்சங்கிலி ஆகும், ஆனால் இது தொகுதி சரிபார்ப்பிற்கான அதன் சொந்த வழிமுறையுடன் புறச்சங்கிலியில் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துகிறது. பிளாஸ்மா சங்கிலிகள் சில நேரங்களில் "குழந்தை" சங்கிலிகள் என்று அழைக்கப்படுகின்றன, இவை அடிப்படையில் எத்தேரியம் முதன்மை வலைப்பின்னலின் சிறிய நகல்களாகும். பிளாஸ்மா சங்கிலிகள் தகராறுகளைத் தீர்க்க (ஆப்டிமிஸ்டிக் ரோலப்கள் போன்ற) பயன்படுத்துகின்றன.

பெற்றோர் சங்கிலிகளிலிருந்து (எத்தேரியம் முதன்மை வலைப்பின்னல் உட்பட) அலைவரிசையைக் குறைக்கச் செயல்படக்கூடிய இந்தச் சங்கிலிகளின் முடிவற்ற அடுக்கை உருவாக்க மெர்க்கல் மரங்கள் உதவுகின்றன. இருப்பினும், இந்தச் சங்கிலிகள் எத்திரியத்திலிருந்து (மோசடிச் சான்றுகள் வழியாக) சில பாதுகாப்பைப் பெற்றாலும், அவற்றின் பாதுகாப்பும் செயல்திறனும் பல வடிவமைப்பு வரம்புகளால் பாதிக்கப்படுகின்றன.

முன்நிபந்தனைகள்

அனைத்து அடிப்படைத் தலைப்புகள் பற்றிய நல்ல புரிதலும், எத்திரியம் அளவிடுதல் பற்றிய உயர்நிலை புரிதலும் உங்களுக்கு இருக்க வேண்டும்.

பிளாஸ்மா என்றால் என்ன?

பிளாஸ்மா என்பது எத்திரியம் போன்ற பொதுத் தொகுதிச்சங்கிலிகளில் அளவிடுதலை மேம்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பாகும். அசல் பிளாஸ்மா வெள்ளை அறிக்கையில் (opens in a new tab) விவரிக்கப்பட்டுள்ளபடி, பிளாஸ்மா சங்கிலிகள் மற்றொரு தொகுதிச்சங்கிலியின் மேல் ("வேர்ச் சங்கிலி" என்று அழைக்கப்படுகிறது) கட்டமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு "குழந்தைச் சங்கிலியும்" வேர்ச் சங்கிலியிலிருந்து நீண்டுள்ளது, மேலும் இது பொதுவாகப் பெற்றோர் சங்கிலியில் பயன்படுத்தப்படும் ஒரு திறன் ஒப்பந்தத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

பிளாஸ்மா ஒப்பந்தம், மற்றவற்றுடன், எத்தேரியம் முதன்மை வலைப்பின்னலுக்கும் பிளாஸ்மா சங்கிலிக்கும் இடையே சொத்துகளை நகர்த்த பயனர்களை அனுமதிக்கும் ஒரு பாலமாகச் செயல்படுகிறது. இது அவற்றை பக்கச்சங்கிலிகளைப் போன்று மாற்றினாலும், பிளாஸ்மா சங்கிலிகள் எத்தேரியம் முதன்மை வலைப்பின்னலின் பாதுகாப்பிலிருந்து—குறைந்தபட்சம், ஓரளவிற்காவது—பயனடைகின்றன. தங்கள் பாதுகாப்பிற்குத் தாங்களே முழுப் பொறுப்பேற்கும் பக்கச்சங்கிலிகளைப் போல இது இல்லை.

பிளாஸ்மா எவ்வாறு செயல்படுகிறது?

பிளாஸ்மா கட்டமைப்பின் அடிப்படைக் கூறுகள்:

புறச்சங்கிலிக் கணக்கீடு

எத்திரியத்தின் தற்போதைய செயலாக்க வேகம் வினாடிக்கு ~ 15-20 பரிவர்த்தனைகள் என வரம்பிடப்பட்டுள்ளது, இது அதிகப் பயனர்களைக் கையாளும் வகையில் அளவிடுவதற்கான குறுகிய காலச் சாத்தியக்கூறைக் குறைக்கிறது. எத்திரியத்தின் ஒருமித்த வழிமுறைக்குத் தொகுதிச்சங்கிலியின் நிலைக்கான ஒவ்வொரு புதுப்பிப்பையும் சரிபார்க்கப் பல சக-முனைய கணுக்கள் தேவைப்படுவதால் இந்தப் பிரச்சனை முக்கியமாக உள்ளது.

பாதுகாப்பிற்கு எத்திரியத்தின் ஒருமித்த வழிமுறை அவசியமாக இருந்தாலும், அது ஒவ்வொரு பயன்பாட்டு நிலைக்கும் பொருந்தாது. எடுத்துக்காட்டாக, ஆலிஸ் பாப்பிற்கு ஒரு கோப்பை காபிக்காகச் செய்யும் தினசரிப் கொடுப்பனவுகளை முழு எத்திரியம் பிணையமும் சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் இரு தரப்பினருக்கும் இடையே ஓரளவிற்கு நம்பிக்கை உள்ளது.

எத்தேரியம் முதன்மை வலைப்பின்னல் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் சரிபார்க்க வேண்டியதில்லை என்று பிளாஸ்மா கருதுகிறது. அதற்குப் பதிலாக, நாம் முதன்மை வலைப்பின்னலுக்கு வெளியே பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தலாம், ஒவ்வொரு பரிவர்த்தனையையும் சரிபார்க்க வேண்டியதில் இருந்து கணுக்களை விடுவிக்கலாம்.

பிளாஸ்மா சங்கிலிகள் வேகம் மற்றும் செலவை மேம்படுத்த முடியும் என்பதால் புறச்சங்கிலிக் கணக்கீடு அவசியமாகும். எடுத்துக்காட்டாக, ஒரு பிளாஸ்மா சங்கிலி பரிவர்த்தனைகளின் வரிசைப்படுத்தல் மற்றும் செயலாக்கத்தை நிர்வகிக்க ஒரு "இயக்குநரை" பயன்படுத்தலாம்—மேலும் பெரும்பாலும் பயன்படுத்துகிறது. ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே பரிவர்த்தனைகளைச் சரிபார்ப்பதால், பிளாஸ்மா சங்கிலியில் செயலாக்க நேரங்கள் எத்தேரியம் முதன்மை வலைப்பின்னலை விட வேகமாக இருக்கும்.

நிலை உறுதிப்பாடுகள்

பிளாஸ்மா பரிவர்த்தனைகளைப் புறச்சங்கிலியில் செயல்படுத்தினாலும், அவை பிரதான எத்திரியம் செயலாக்க அடுக்கில் தீர்க்கப்படுகின்றன—இல்லையெனில், பிளாஸ்மா சங்கிலிகள் எத்திரியத்தின் பாதுகாப்பு உத்தரவாதங்களிலிருந்து பயனடைய முடியாது. ஆனால் பிளாஸ்மா சங்கிலியின் நிலையை அறியாமல் புறச்சங்கிலிப் பரிவர்த்தனைகளை இறுதி செய்வது பாதுகாப்பு மாதிரியை உடைத்து, தவறான பரிவர்த்தனைகளின் பெருக்கத்தை அனுமதிக்கும். இதனால்தான் பிளாஸ்மா சங்கிலியில் தொகுதிகளை உருவாக்குவதற்குப் பொறுப்பான நிறுவனமான இயக்குநர், எத்திரியத்தில் அவ்வப்போது "நிலை உறுதிப்பாடுகளை" வெளியிட வேண்டும்.

ஒரு உறுதிப்பாட்டுத் திட்டம் (opens in a new tab) என்பது ஒரு மதிப்பு அல்லது அறிக்கையை மற்றொரு தரப்பினருக்கு வெளிப்படுத்தாமல் உறுதி செய்வதற்கான ஒரு கிரிப்டோகிராஃபிக் நுட்பமாகும். நீங்கள் ஒரு மதிப்பு அல்லது அறிக்கைக்கு உறுதியளித்தவுடன் அதை மாற்ற முடியாது என்ற பொருளில் உறுதிப்பாடுகள் "கட்டுப்படுத்துபவை" ஆகும். பிளாஸ்மாவில் உள்ள நிலை உறுதிப்பாடுகள் "மெர்கல் வேர்கள்" (ஒரு மெர்க்கல் மரத்திலிருந்து பெறப்பட்டவை) வடிவத்தை எடுக்கின்றன, இவற்றை இயக்குநர் எத்திரியம் சங்கிலியில் உள்ள பிளாஸ்மா ஒப்பந்தத்திற்கு இடைவெளிகளில் அனுப்புகிறார்.

மெர்கல் வேர்கள் என்பவை அதிக அளவிலான தகவல்களைச் சுருக்க உதவும் கிரிப்டோகிராஃபிக் மூலங்களாகும். ஒரு மெர்கல் வேர் (இந்த நிலையில் "தொகுதி வேர்" என்றும் அழைக்கப்படுகிறது) ஒரு தொகுதியில் உள்ள அனைத்துப் பரிவர்த்தனைகளையும் குறிக்கலாம். ஒரு சிறிய தரவுப் பகுதி பெரிய தரவுத்தொகுப்பின் ஒரு பகுதி என்பதைச் சரிபார்ப்பதையும் மெர்கல் வேர்கள் எளிதாக்குகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட தொகுதியில் ஒரு பரிவர்த்தனை சேர்க்கப்பட்டுள்ளதை நிரூபிக்க ஒரு பயனர் ஒரு மெர்கல் சான்றை உருவாக்க முடியும்.

எத்திரியத்திற்குப் புறச்சங்கிலியின் நிலை பற்றிய தகவல்களை வழங்குவதற்கு மெர்கல் வேர்கள் முக்கியமானவை. மெர்கல் வேர்களை நீங்கள் "சேமிப்புப் புள்ளிகள்" என்று நினைக்கலாம்: இயக்குநர், "x நேரத்தில் பிளாஸ்மா சங்கிலியின் நிலை இதுதான், மேலும் இதுவே சான்றாக உள்ள மெர்கல் வேர்" என்று கூறுகிறார். இயக்குநர் ஒரு மெர்கல் வேருடன் பிளாஸ்மா சங்கிலியின் தற்போதைய நிலைக்கு உறுதியளிக்கிறார், இதனால்தான் இது "நிலை உறுதிப்பாடு" என்று அழைக்கப்படுகிறது.

உள்ளீடுகள் மற்றும் வெளியேற்றங்கள்

எத்திரியம் பயனர்கள் பிளாஸ்மாவைப் பயன்படுத்திக் கொள்ள, முதன்மை வலைப்பின்னலுக்கும் பிளாஸ்மா சங்கிலிகளுக்கும் இடையே நிதியை நகர்த்துவதற்கான ஒரு வழிமுறை இருக்க வேண்டும். இருப்பினும், பிளாஸ்மா சங்கிலியில் உள்ள ஒரு முகவரிக்கு நாம் தன்னிச்சையாக ஈதரை அனுப்ப முடியாது—இந்தச் சங்கிலிகள் இணக்கமற்றவை, எனவே பரிவர்த்தனை தோல்வியடையும் அல்லது நிதி இழப்புக்கு வழிவகுக்கும்.

பயனர் உள்ளீடுகள் மற்றும் வெளியேற்றங்களைச் செயல்படுத்த எத்திரியத்தில் இயங்கும் ஒரு முதன்மை ஒப்பந்தத்தைப் பிளாஸ்மா பயன்படுத்துகிறது. இந்த முதன்மை ஒப்பந்தம் நிலை உறுதிப்பாடுகளைக் கண்காணிப்பதற்கும் (முன்னர் விளக்கப்பட்டது) மோசடிச் சான்றுகள் மூலம் நேர்மையற்ற நடத்தைக்குத் தண்டனை வழங்குவதற்கும் (இதைப் பற்றிப் பின்னர் விரிவாகக் காண்போம்) பொறுப்பாகும்.

பிளாஸ்மா சங்கிலியில் நுழைதல்

பிளாஸ்மா சங்கிலியில் நுழைய, ஆலிஸ் (பயனர்) பிளாஸ்மா ஒப்பந்தத்தில் ETH அல்லது ஏதேனும் ERC-20 வில்லையை வைப்பீடு செய்ய வேண்டும். ஒப்பந்த வைப்பீடுகளைக் கண்காணிக்கும் பிளாஸ்மா இயக்குநர், ஆலிஸின் ஆரம்ப வைப்பீட்டிற்குச் சமமான தொகையை மீண்டும் உருவாக்கி, பிளாஸ்மா சங்கிலியில் உள்ள அவரது முகவரிக்கு வெளியிடுகிறார். குழந்தைச் சங்கிலியில் நிதியைப் பெற்றதை ஆலிஸ் சான்றளிக்க வேண்டும், பின்னர் இந்த நிதியைப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தலாம்.

பிளாஸ்மா சங்கிலியிலிருந்து வெளியேறுவது பல காரணங்களுக்காக அதில் நுழைவதை விடச் சிக்கலானது. அதில் மிகப்பெரிய காரணம் என்னவென்றால், எத்திரியத்திடம் பிளாஸ்மா சங்கிலியின் நிலை பற்றிய தகவல் இருந்தாலும், அந்தத் தகவல் உண்மையானதா இல்லையா என்பதை அதனால் சரிபார்க்க முடியாது. ஒரு தீங்கிழைக்கும் பயனர் தவறான கூற்றை ("என்னிடம் 1000 ETH உள்ளது") முன்வைக்கலாம் மற்றும் அந்த உரிமைக்கோரலை ஆதரிக்கப் போலிச் சான்றுகளை வழங்கித் தப்பிக்கலாம்.

தீங்கிழைக்கும் திரும்பப் பெறுதல்களைத் தடுக்க, ஒரு "சவால் காலம்" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சவால் காலத்தில் (பொதுவாக ஒரு வாரம்), யார் வேண்டுமானாலும் மோசடிச் சான்றைப் பயன்படுத்தித் திரும்பப் பெறுதல் கோரிக்கைக்குச் சவால் விடலாம். சவால் வெற்றியடைந்தால், திரும்பப் பெறுதல் கோரிக்கை நிராகரிக்கப்படும்.

இருப்பினும், பொதுவாகப் பயனர்கள் நேர்மையானவர்கள் மற்றும் தங்களுக்குச் சொந்தமான நிதியைப் பற்றிச் சரியான உரிமைக்கோரல்களைச் செய்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், ஆலிஸ் பிளாஸ்மா ஒப்பந்தத்திற்கு ஒரு பரிவர்த்தனையைச் சமர்ப்பிப்பதன் மூலம் வேர்ச் சங்கிலியில் (எத்திரியம்) திரும்பப் பெறுதல் கோரிக்கையைத் தொடங்குவார்.

பிளாஸ்மா சங்கிலியில் தனது நிதியை உருவாக்கும் ஒரு பரிவர்த்தனை ஒரு தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதைச் சரிபார்க்கும் மெர்கல் சான்றையும் அவர் வழங்க வேண்டும். Unspent Transaction Output (UTXO) (opens in a new tab) மாதிரியைப் பயன்படுத்தும் பிளாஸ்மா MVP போன்ற பிளாஸ்மாவின் மறுசெய்கைகளுக்கு இது அவசியமாகும்.

பிளாஸ்மா கேஷ் போன்ற மற்றவை, நிதியை UTXO-களுக்குப் பதிலாகப் பூஞ்சையற்ற வில்லைகளாகக் குறிக்கின்றன. இந்த நிலையில், திரும்பப் பெறுவதற்குப் பிளாஸ்மா சங்கிலியில் உள்ள வில்லைகளின் உரிமைக்கான சான்று தேவைப்படுகிறது. வில்லையை உள்ளடக்கிய இரண்டு சமீபத்திய பரிவர்த்தனைகளைச் சமர்ப்பிப்பதன் மூலமும், அந்தப் பரிவர்த்தனைகள் ஒரு தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளதைச் சரிபார்க்கும் மெர்கல் சான்றை வழங்குவதன் மூலமும் இது செய்யப்படுகிறது.

நேர்மையான நடத்தைக்கான உத்தரவாதமாகப் பயனர் திரும்பப் பெறுதல் கோரிக்கையுடன் ஒரு பிணைப்பையும் சேர்க்க வேண்டும். ஆலிஸின் திரும்பப் பெறுதல் கோரிக்கை தவறானது என்று சவால் விடுபவர் நிரூபித்தால், அவரது பிணைப்பு வெட்டப்படும், மேலும் அதில் ஒரு பகுதி சவால் விடுபவருக்கு வெகுமதியாகச் செல்லும்.

யாரும் மோசடிச் சான்றை வழங்காமல் சவால் காலம் முடிவடைந்தால், ஆலிஸின் திரும்பப் பெறுதல் கோரிக்கை செல்லுபடியாகும் என்று கருதப்படும், இது எத்திரியத்தில் உள்ள பிளாஸ்மா ஒப்பந்தத்திலிருந்து வைப்பீடுகளைத் திரும்பப் பெற அவரை அனுமதிக்கிறது.

தகராறு நடுவர்

எந்தவொரு தொகுதிச்சங்கிலியையும் போலவே, பங்கேற்பாளர்கள் தீங்கிழைக்கும் வகையில் செயல்பட்டால் (எ.கா., நிதியை இரட்டைச் செலவு செய்தல்) பரிவர்த்தனைகளின் ஒருமைப்பாட்டைச் செயல்படுத்துவதற்கான ஒரு வழிமுறை பிளாஸ்மா சங்கிலிகளுக்கும் தேவை. இதற்காக, நிலை மாற்றங்களின் செல்லுபடியாகும் தன்மை தொடர்பான தகராறுகளைத் தீர்க்கவும், மோசமான நடத்தைக்கு அபராதம் விதிக்கவும் பிளாஸ்மா சங்கிலிகள் மோசடிச் சான்றுகளைப் பயன்படுத்துகின்றன. ஒரு பிளாஸ்மா குழந்தைச் சங்கிலி அதன் பெற்றோர் சங்கிலி அல்லது வேர்ச் சங்கிலியிடம் புகாரளிக்கும் ஒரு வழிமுறையாக மோசடிச் சான்றுகள் பயன்படுத்தப்படுகின்றன.

மோசடிச் சான்று என்பது ஒரு குறிப்பிட்ட நிலை மாற்றம் தவறானது என்ற உரிமைக்கோரல் மட்டுமே. ஒரு பயனர் (ஆலிஸ்) அதே நிதியை இரண்டு முறை செலவிட முயற்சிப்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். ஒருவேளை அவர் பாப்புடனான ஒரு பரிவர்த்தனையில் UTXO-ஐச் செலவழித்திருக்கலாம், மேலும் அதே UTXO-ஐ (அது இப்போது பாப்பிற்குச் சொந்தமானது) மற்றொரு பரிவர்த்தனையில் செலவிட விரும்பலாம்.

திரும்பப் பெறுதலைத் தடுக்க, முந்தைய பரிவர்த்தனையில் ஆலிஸ் குறிப்பிட்ட UTXO-ஐச் செலவழித்ததற்கான ஆதாரத்தையும், ஒரு தொகுதியில் பரிவர்த்தனை சேர்க்கப்பட்டதற்கான மெர்கல் சான்றையும் வழங்குவதன் மூலம் பாப் ஒரு மோசடிச் சான்றை உருவாக்குவார். இதே செயல்முறை பிளாஸ்மா கேஷிலும் செயல்படுகிறது—ஆலிஸ் தான் திரும்பப் பெற முயற்சிக்கும் வில்லைகளை முன்னரே மாற்றியுள்ளார் என்பதற்கான சான்றைப் பாப் வழங்க வேண்டும்.

பாப்பின் சவால் வெற்றியடைந்தால், ஆலிஸின் திரும்பப் பெறுதல் கோரிக்கை ரத்து செய்யப்படும். இருப்பினும், இந்த அணுகுமுறை திரும்பப் பெறுதல் கோரிக்கைகளுக்காகச் சங்கிலியைக் கண்காணிக்கும் பாப்பின் திறனைப் பொறுத்தது. பாப் ஆஃப்லைனில் இருந்தால், சவால் காலம் முடிவடைந்தவுடன் ஆலிஸ் தீங்கிழைக்கும் திரும்பப் பெறுதலைச் செயல்படுத்த முடியும்.

பிளாஸ்மாவில் பெருந்திரள் வெளியேற்றப் பிரச்சனை

ஏராளமான பயனர்கள் ஒரே நேரத்தில் பிளாஸ்மா சங்கிலியிலிருந்து திரும்பப் பெற முயற்சிக்கும்போது பெருந்திரள் வெளியேற்றப் பிரச்சனை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை ஏன் உள்ளது என்பது பிளாஸ்மாவின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றுடன் தொடர்புடையது: தரவு கிடைக்காமலிருப்பது.

தரவு கிடைக்கும் தன்மை என்பது முன்மொழியப்பட்ட தொகுதிக்கான தகவல் உண்மையில் தொகுதிச்சங்கிலிப் பிணையத்தில் வெளியிடப்பட்டதா என்பதைச் சரிபார்க்கும் திறனாகும். உற்பத்தியாளர் தொகுதியை வெளியிட்டாலும், தொகுதியை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட தரவை நிறுத்தி வைத்தால் ஒரு தொகுதி "கிடைக்கவில்லை" என்று கருதப்படும்.

கணுக்கள் தொகுதியைப் பதிவிறக்கம் செய்து பரிவர்த்தனைகளின் செல்லுபடியாகும் தன்மையைச் சரிபார்க்க வேண்டுமானால் தொகுதிகள் கிடைக்க வேண்டும். தொகுதி உற்பத்தியாளர்களை அனைத்துப் பரிவர்த்தனைத் தரவையும் சங்கிலிசார் நிலையில் இடுகையிடக் கட்டாயப்படுத்துவதன் மூலம் தொகுதிச்சங்கிலிகள் தரவு கிடைப்பதை உறுதி செய்கின்றன.

எத்திரியத்தின் அடிப்படை அடுக்கில் கட்டமைக்கப்படும் புறச்சங்கிலி அளவிடுதல் நெறிமுறைகளைப் பாதுகாப்பதற்கும் தரவு கிடைக்கும் தன்மை உதவுகிறது. இந்தச் சங்கிலிகளில் உள்ள இயக்குநர்களை எத்திரியத்தில் பரிவர்த்தனைத் தரவை வெளியிடக் கட்டாயப்படுத்துவதன் மூலம், சங்கிலியின் சரியான நிலையைக் குறிக்கும் மோசடிச் சான்றுகளை உருவாக்குவதன் மூலம் யார் வேண்டுமானாலும் தவறான தொகுதிகளுக்குச் சவால் விடலாம்.

பிளாஸ்மா சங்கிலிகள் முதன்மையாகப் பரிவர்த்தனைத் தரவை இயக்குநரிடம் சேமிக்கின்றன, மேலும் எந்தத் தரவையும் முதன்மை வலைப்பின்னலில் வெளியிடுவதில்லை (அதாவது, அவ்வப்போது நிலை உறுதிப்பாடுகளைத் தவிர). இதன் பொருள், தவறான பரிவர்த்தனைகளுக்குச் சவால் விடும் மோசடிச் சான்றுகளை உருவாக்கப் பயனர்கள் தொகுதித் தரவை வழங்க இயக்குநரை நம்பியிருக்க வேண்டும். இந்த அமைப்பு வேலை செய்தால், பயனர்கள் நிதியைப் பாதுகாக்க எப்போதும் மோசடிச் சான்றுகளைப் பயன்படுத்தலாம்.

எந்தவொரு பயனரும் மட்டுமல்லாமல், இயக்குநரே தீங்கிழைக்கும் தரப்பினராகச் செயல்படும்போது பிரச்சனை தொடங்குகிறது. தொகுதிச்சங்கிலி இயக்குநரின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதால், பிளாஸ்மா சங்கிலியில் உள்ள பயனர்களுக்குச் சொந்தமான நிதியைத் திருடுவது போன்ற பெரிய அளவிலான தவறான நிலை மாற்றங்களை முன்னெடுக்க அவர்களுக்கு அதிக ஊக்கத்தொகை உள்ளது.

இந்த நிலையில், உன்னதமான மோசடிச் சான்று அமைப்பைப் பயன்படுத்துவது வேலை செய்யாது. ஆலிஸ் மற்றும் பாப்பின் நிதியைத் தங்கள் பணப்பைக்கு மாற்றும் தவறான பரிவர்த்தனையை இயக்குநர் எளிதாகச் செய்யலாம் மற்றும் மோசடிச் சான்றை உருவாக்கத் தேவையான தரவை மறைக்கலாம். பயனர்களுக்கோ அல்லது முதன்மை வலைப்பின்னலுக்கோ தரவைக் கிடைக்கச் செய்ய இயக்குநர் தேவையில்லை என்பதால் இது சாத்தியமாகும்.

எனவே, பிளாஸ்மா சங்கிலியிலிருந்து பயனர்களின் "பெருந்திரள் வெளியேற்றத்தை" முயற்சிப்பதே மிகவும் நம்பிக்கையான தீர்வாகும். பெருந்திரள் வெளியேற்றம் நிதியைத் திருடுவதற்கான தீங்கிழைக்கும் இயக்குநரின் திட்டத்தை மெதுவாக்குகிறது மற்றும் பயனர்களுக்குச் சில அளவிலான பாதுகாப்பை வழங்குகிறது. ஒவ்வொரு UTXO (அல்லது வில்லை) எப்போது உருவாக்கப்பட்டது என்பதன் அடிப்படையில் திரும்பப் பெறுதல் கோரிக்கைகள் வரிசைப்படுத்தப்படுகின்றன, இது தீங்கிழைக்கும் இயக்குநர்கள் நேர்மையான பயனர்களை முந்திச் செயல்படுவதைத் தடுக்கிறது.

ஆயினும்கூட, பெருந்திரள் வெளியேற்றத்தின் போது திரும்பப் பெறுதல் கோரிக்கைகளின் செல்லுபடியாகும் தன்மையைச் சரிபார்க்க நமக்கு இன்னும் ஒரு வழி தேவை—தவறான வெளியேற்றங்களைச் செயலாக்கும் குழப்பத்தில் சந்தர்ப்பவாத நபர்கள் பணம் சம்பாதிப்பதைத் தடுக்க. தீர்வு எளிதானது: பயனர்கள் தங்கள் பணத்தை வெளியேற்றச் சங்கிலியின் கடைசி செல்லுபடியாகும் நிலையை இடுகையிடத் தேவை.

ஆனால் இந்த அணுகுமுறையில் இன்னும் சிக்கல்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, பிளாஸ்மா சங்கிலியில் உள்ள அனைத்துப் பயனர்களும் வெளியேற வேண்டும் என்றால் (இது ஒரு தீங்கிழைக்கும் இயக்குநரின் விஷயத்தில் சாத்தியமாகும்), பிளாஸ்மா சங்கிலியின் முழுச் செல்லுபடியாகும் நிலையும் ஒரே நேரத்தில் எத்திரியத்தின் அடிப்படை அடுக்கில் கொட்டப்பட வேண்டும். பிளாஸ்மா சங்கிலிகளின் தன்னிச்சையான அளவு (அதிகப் பரிவர்த்தனை வீதம் = அதிகத் தரவு) மற்றும் எத்திரியத்தின் செயலாக்க வேகத்தின் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றுடன், இது ஒரு சிறந்த தீர்வு அல்ல.

வெளியேற்ற விளையாட்டுகள் கோட்பாட்டில் நன்றாகத் தெரிந்தாலும், நிஜ வாழ்க்கை பெருந்திரள் வெளியேற்றங்கள் எத்திரியத்திலேயே பிணையம் தழுவிய நெரிசலைத் தூண்டும். எத்திரியத்தின் செயல்பாட்டிற்குத் தீங்கு விளைவிப்பதைத் தவிர, மோசமாக ஒருங்கிணைக்கப்பட்ட பெருந்திரள் வெளியேற்றம் என்பது பிளாஸ்மா சங்கிலியில் உள்ள ஒவ்வொரு கணக்கையும் இயக்குநர் காலி செய்வதற்கு முன்பு பயனர்களால் நிதியைத் திரும்பப் பெற முடியாமல் போகலாம் என்பதாகும்.

பிளாஸ்மாவின் நன்மைகள் மற்றும் தீமைகள்

நன்மைகள்தீமைகள்
அதிகப் பரிவர்த்தனை வீதத்தையும் ஒரு பரிவர்த்தனைக்குக் குறைந்த செலவையும் வழங்குகிறது.பொதுவான கணக்கீட்டை ஆதரிக்காது (திறன் ஒப்பந்தங்களை இயக்க முடியாது). அடிப்படை வில்லைப் பரிமாற்றங்கள், மாற்றங்கள் மற்றும் வேறு சில பரிவர்த்தனை வகைகள் மட்டுமே முன்கணிப்பு தர்க்கம் மூலம் ஆதரிக்கப்படுகின்றன.
தன்னிச்சையான பயனர்களுக்கிடையேயான பரிவர்த்தனைகளுக்கு நல்லது (இருவரும் பிளாஸ்மா சங்கிலியில் நிறுவப்பட்டிருந்தால் ஒரு பயனர் ஜோடிக்கு மேல்நிலை இல்லை)உங்கள் நிதியின் பாதுகாப்பை உறுதி செய்யப் பிணையத்தை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் (நேரடித் தேவை) அல்லது இந்தப் பொறுப்பை வேறொருவருக்குப் பிரதிநிதியாக வழங்க வேண்டும்.
பிரதான சங்கிலியுடன் தொடர்பில்லாத குறிப்பிட்ட பயன்பாட்டு நிகழ்வுகளுக்குப் பிளாஸ்மா சங்கிலிகளை மாற்றியமைக்கலாம். வணிகங்கள் உட்பட யார் வேண்டுமானாலும் வெவ்வேறு சூழல்களில் செயல்படும் அளவிடக்கூடிய உள்கட்டமைப்பை வழங்கப் பிளாஸ்மா திறன் ஒப்பந்தங்களைத் தனிப்பயனாக்கலாம்.தரவைச் சேமிக்கவும் கோரிக்கையின் பேரில் அதை வழங்கவும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயக்குநர்களை நம்பியுள்ளது.
கணக்கீடு மற்றும் சேமிப்பகத்தைப் புறச்சங்கிலிக்கு நகர்த்துவதன் மூலம் எத்தேரியம் முதன்மை வலைப்பின்னலின் சுமையைக் குறைக்கிறது.சவால்களை அனுமதிக்கத் திரும்பப் பெறுதல்கள் பல நாட்கள் தாமதமாகின்றன. பூஞ்சையான சொத்துகளுக்கு, நீர்மைத்தன்மை வழங்குநர்களால் இதைத் தணிக்க முடியும், ஆனால் அதனுடன் தொடர்புடைய மூலதனச் செலவு உள்ளது.
பல பயனர்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்தால், எத்தேரியம் முதன்மை வலைப்பின்னல் நெரிசலடையக்கூடும்.

பிளாஸ்மா மற்றும் அடுக்கு 2 அளவிடுதல் நெறிமுறைகள்

பிளாஸ்மா ஒரு காலத்தில் எத்திரியத்திற்கான பயனுள்ள அளவிடுதல் தீர்வாகக் கருதப்பட்டாலும், அது அடுக்கு 2 (l2) அளவிடுதல் நெறிமுறைகளுக்கு ஆதரவாகக் கைவிடப்பட்டது. L2 அளவிடுதல் தீர்வுகள் பிளாஸ்மாவின் பல பிரச்சனைகளைச் சரிசெய்கின்றன:

செயல்திறன்

பூஜ்ய-அறிவு ரோலப்கள் புறச்சங்கிலியில் செயலாக்கப்பட்ட ஒவ்வொரு தொகுதிப் பரிவர்த்தனைகளின் செல்லுபடியாகும் தன்மைக்கான கிரிப்டோகிராஃபிக் சான்றுகளை உருவாக்குகின்றன. இது பயனர்கள் (மற்றும் இயக்குநர்கள்) தவறான நிலை மாற்றங்களை முன்னெடுப்பதைத் தடுக்கிறது, சவால் காலங்கள் மற்றும் வெளியேற்ற விளையாட்டுகளின் தேவையை நீக்குகிறது. பயனர்கள் தங்கள் நிதியைப் பாதுகாக்கச் சங்கிலியை அவ்வப்போது கண்காணிக்க வேண்டியதில்லை என்பதையும் இது குறிக்கிறது.

திறன் ஒப்பந்தங்களுக்கான ஆதரவு

பிளாஸ்மா கட்டமைப்பின் மற்றொரு பிரச்சனை எத்திரியம் திறன் ஒப்பந்தங்களின் செயலாக்கத்தை ஆதரிக்க இயலாமை (opens in a new tab) ஆகும். இதன் விளைவாக, பிளாஸ்மாவின் பெரும்பாலான செயலாக்கங்கள் பெரும்பாலும் எளிய கொடுப்பனவுகள் அல்லது ERC-20 வில்லைகளின் பரிமாற்றத்திற்காகவே உருவாக்கப்பட்டன.

மாறாக, ஆப்டிமிஸ்டிக் ரோலப்கள் எத்திரியம் மெய்நிகர் இயந்திரத்துடன் இணக்கமானவை மற்றும் எத்திரியம்-பூர்வீக திறன் ஒப்பந்தங்களை இயக்க முடியும், இது பரவலாக்கப்பட்ட செயலிகளை (dapp) அளவிடுவதற்கான பயனுள்ள மற்றும் பாதுகாப்பான தீர்வாக அமைகிறது. இதேபோல், ZK-ரோலப்கள் தன்னிச்சையான தர்க்கத்தைச் செயலாக்கவும் திறன் ஒப்பந்தங்களை இயக்கவும் அனுமதிக்கும் EVM-இன் பூஜ்ய-அறிவுச் செயலாக்கத்தை (zkEVM) உருவாக்குவதற்கான (opens in a new tab) திட்டங்கள் நடந்து வருகின்றன.

தரவு கிடைக்காமலிருப்பது

முன்னர் விளக்கியபடி, பிளாஸ்மா தரவு கிடைக்கும் தன்மைப் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறது. ஒரு தீங்கிழைக்கும் இயக்குநர் பிளாஸ்மா சங்கிலியில் தவறான மாற்றத்தை முன்னெடுத்தால், மோசடிச் சான்றை உருவாக்கத் தேவையான தரவை இயக்குநர் நிறுத்தி வைக்க முடியும் என்பதால் பயனர்களால் அதற்குச் சவால் விட முடியாது. ரோலப்கள் எத்திரியத்தில் பரிவர்த்தனைத் தரவை இடுகையிட இயக்குநர்களைக் கட்டாயப்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கின்றன, இது சங்கிலியின் நிலையைச் சரிபார்க்கவும் தேவைப்பட்டால் மோசடிச் சான்றுகளை உருவாக்கவும் யாரையும் அனுமதிக்கிறது.

பெருந்திரள் வெளியேற்றப் பிரச்சனை

ZK-ரோலப்கள் மற்றும் ஆப்டிமிஸ்டிக் ரோலப்கள் இரண்டும் பிளாஸ்மாவின் பெருந்திரள் வெளியேற்றப் பிரச்சனையைப் பல்வேறு வழிகளில் தீர்க்கின்றன. எடுத்துக்காட்டாக, எந்தச் சூழ்நிலையிலும் இயக்குநர்கள் பயனர் நிதியைத் திருட முடியாது என்பதை உறுதி செய்யும் கிரிப்டோகிராஃபிக் வழிமுறைகளை ZK-ரோலப் நம்பியுள்ளது.

இதேபோல், ஆப்டிமிஸ்டிக் ரோலப்கள் திரும்பப் பெறுதல்களுக்குத் தாமதக் காலத்தை விதிக்கின்றன, இதன் போது யார் வேண்டுமானாலும் சவாலைத் தொடங்கலாம் மற்றும் தீங்கிழைக்கும் திரும்பப் பெறுதல் கோரிக்கைகளைத் தடுக்கலாம். இது பிளாஸ்மாவைப் போலவே இருந்தாலும், வித்தியாசம் என்னவென்றால், மோசடிச் சான்றுகளை உருவாக்கத் தேவையான தரவைச் சரிபார்ப்பவர்கள் அணுக முடியும். எனவே, ரோலப் பயனர்கள் எத்தேரியம் முதன்மை வலைப்பின்னலுக்கு வெறித்தனமான, "முதலில் வெளியேறும்" இடம்பெயர்வில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை.

பக்கச்சங்கிலிகள் மற்றும் ஷார்டிங்கிலிருந்து பிளாஸ்மா எவ்வாறு வேறுபடுகிறது?

பிளாஸ்மா, பக்கச்சங்கிலிகள் மற்றும் ஷார்டிங் ஆகியவை ஓரளவிற்கு ஒத்தவை, ஏனெனில் அவை அனைத்தும் எத்தேரியம் முதன்மை வலைப்பின்னலுடன் ஏதோ ஒரு வகையில் இணைகின்றன. இருப்பினும், இந்த இணைப்புகளின் நிலை மற்றும் வலிமை மாறுபடும், இது ஒவ்வொரு அளவிடுதல் தீர்வின் பாதுகாப்புப் பண்புகளையும் பாதிக்கிறது.

பிளாஸ்மா மற்றும் பக்கச்சங்கிலிகள்

ஒரு பக்கச்சங்கிலி என்பது இருவழிப் பாலம் வழியாக எத்தேரியம் முதன்மை வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்ட ஒரு சுயாதீனமாக இயக்கப்படும் தொகுதிச்சங்கிலி ஆகும். பாலங்கள் பக்கச்சங்கிலியில் பரிவர்த்தனை செய்ய இரண்டு தொகுதிச்சங்கிலிகளுக்கு இடையே வில்லைகளைப் பரிமாறிக்கொள்ள பயனர்களை அனுமதிக்கின்றன, இது எத்தேரியம் முதன்மை வலைப்பின்னலில் நெரிசலைக் குறைக்கிறது மற்றும் அளவிடுதலை மேம்படுத்துகிறது. பக்கச்சங்கிலிகள் ஒரு தனி ஒருமித்த வழிமுறையைப் பயன்படுத்துகின்றன மற்றும் பொதுவாக எத்தேரியம் முதன்மை வலைப்பின்னலை விட மிகச் சிறியவை. இதன் விளைவாக, இந்தச் சங்கிலிகளுக்குச் சொத்துகளைப் பாலமாக்குவது அதிக அபாயத்தை உள்ளடக்கியது; பக்கச்சங்கிலி மாதிரியில் எத்தேரியம் முதன்மை வலைப்பின்னலிலிருந்து பெறப்பட்ட பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாததால், பக்கச்சங்கிலி மீதான தாக்குதலில் பயனர்கள் நிதியை இழக்கும் அபாயம் உள்ளது.

மாறாக, பிளாஸ்மா சங்கிலிகள் முதன்மை வலைப்பின்னலிலிருந்து தங்கள் பாதுகாப்பைப் பெறுகின்றன. இது பக்கச்சங்கிலிகளை விட அவற்றை அளவிடக்கூடிய வகையில் பாதுகாப்பானதாக்குகிறது. பக்கச்சங்கிலிகள் மற்றும் பிளாஸ்மா சங்கிலிகள் இரண்டும் வெவ்வேறு ஒருமித்த நெறிமுறைகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் வித்தியாசம் என்னவென்றால், பிளாஸ்மா சங்கிலிகள் எத்தேரியம் முதன்மை வலைப்பின்னலில் ஒவ்வொரு தொகுதிக்கும் மெர்கல் வேர்களை வெளியிடுகின்றன. தொகுதி வேர்கள் என்பவை பிளாஸ்மா சங்கிலியில் நடக்கும் பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களைச் சரிபார்க்க நாம் பயன்படுத்தக்கூடிய சிறிய தகவல்களாகும். பிளாஸ்மா சங்கிலியில் தாக்குதல் நடந்தால், பயனர்கள் தகுந்த சான்றுகளைப் பயன்படுத்தித் தங்கள் நிதியைப் பாதுகாப்பாக முதன்மை வலைப்பின்னலுக்குத் திரும்பப் பெறலாம்.

பிளாஸ்மா மற்றும் ஷார்டிங்

பிளாஸ்மா சங்கிலிகள் மற்றும் ஷார்டு சங்கிலிகள் இரண்டும் அவ்வப்போது எத்தேரியம் முதன்மை வலைப்பின்னலுக்குக் கிரிப்டோகிராஃபிக் சான்றுகளை வெளியிடுகின்றன. இருப்பினும், இரண்டும் வெவ்வேறு பாதுகாப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன.

ஒவ்வொரு தரவு ஷார்டு பற்றிய விரிவான தகவல்களைக் கொண்ட "தொகுப்புத் தலைப்புகளை" ஷார்டு சங்கிலிகள் முதன்மை வலைப்பின்னலுக்கு உறுதியளிக்கின்றன. முதன்மை வலைப்பின்னலில் உள்ள கணுக்கள் தரவு ஷார்டுகளின் செல்லுபடியாகும் தன்மையைச் சரிபார்த்துச் செயல்படுத்துகின்றன, தவறான ஷார்டு மாற்றங்களின் சாத்தியக்கூறைக் குறைக்கின்றன மற்றும் தீங்கிழைக்கும் செயல்பாட்டிற்கு எதிராகப் பிணையத்தைப் பாதுகாக்கின்றன.

பிளாஸ்மா வேறுபட்டது, ஏனெனில் முதன்மை வலைப்பின்னல் குழந்தைச் சங்கிலிகளின் நிலை பற்றிய குறைந்தபட்ச தகவல்களை மட்டுமே பெறுகிறது. இதன் பொருள் முதன்மை வலைப்பின்னலால் குழந்தைச் சங்கிலிகளில் நடத்தப்படும் பரிவர்த்தனைகளைத் திறம்படச் சரிபார்க்க முடியாது, இதனால் அவை குறைவான பாதுகாப்பைக் கொண்டுள்ளன.

குறிப்பு எத்திரியம் தொகுதிச்சங்கிலியை ஷார்டிங் செய்வது இனி வரைபடத்தில் இல்லை. இது ரோலப்கள் மற்றும் டாங்க்ஷார்டிங் வழியாக அளவிடுவதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்மாவைப் பயன்படுத்தவும்

உங்கள் பரவலாக்கப்பட்ட செயலிகளில் (dapp) நீங்கள் ஒருங்கிணைக்கக்கூடிய பிளாஸ்மாவின் செயலாக்கங்களைப் பல திட்டங்கள் வழங்குகின்றன:

பயிற்சிகள்: எத்திரியத்தில் பிளாஸ்மா சங்கிலிகள்